யானைகள் முன் நின்று செல்ஃபி எடுப்பவா்களுக்கு அபராதம் : பவானிசாகா் வனத் துறை எச்சரிக்கை
ஆபத்தை உணராமல் கைப்பேசி மூலம் காட்டு யானைகள் முன் நின்று செல்பி எடுப்பவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என பவானிசாகா் வனத் துறை எச்சரித்துள்ளது.;
ஈரோடு : ஆபத்தை உணராமல் கைப்பேசி மூலம் காட்டு யானைகள் முன் நின்று தற்படம் செல்ஃபி எடுப்பவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என பவானிசாகா் வனத் துறை எச்சரித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. தற்போது வனப் பகுதியில் வறட்சி நிலவ தொடங்கியுள்ளதால், காட்டு யானைகள் குடிநீர் மற்றும் தீவனம் தேடி பவானிசாகர் அணையின் கரையோரப் பகுதியில் உள்ள முள்புதர் காட்டில் முகாமிடத் தொடங்கியுள்ளன.
அபாயகரமான செல்ஃபி முயற்சி
இதற்கிடையே பவானிசாகர் அணையின் கரையில் காட்டு யானைகள் புதன்கிழமை நடமாடின. அப்போது அங்கிருந்த இரு இளைஞர்கள் ஆபத்தை உணராமல் காட்டு யானையின் அருகே சென்று கைப்பேசியில் செல்ஃபி எடுத்தனர். இதனால் யானை- மனித மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
வனத்துறை எச்சரிக்கை
இந்நிலையில், பவானிசாகர் அணை பகுதியில் மீன்பிடிக்க செல்வோர் மற்றும் பொதுமக்கள் காட்டு யானைகளின் அருகே செல்ல வேண்டாம் எனவும், மீறி காட்டு யானை அருகே சென்று புகைப்படம் எடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத் துறை எச்சரித்துள்ளது.
காட்டு யானைகளின் அருகில் மனிதர்கள் செல்வது அபாயத்தை விளைவிக்கும். யானைகள் தாக்கினால் உயிரிழப்பு ஏற்படலாம். மேலும் காட்டு யானைகளின் வாழ்விடங்களை பாதுகாக்க வேண்டும். மனிதர்களும் பாதுகாப்பாக இருக்க தேவையான ஏற்பாடுகளை வனத்துறை செய்ய வேண்டும்.
காட்டு யானைகளின் அருகில் சென்று செல்ஃபி எடுப்பது உயிருக்கு ஆபத்தானது மட்டுமல்ல, சட்டப்படி தண்டனைக்குரியதுமாகும். தேவையற்ற செல்ஃபிகளை எடுக்கும் போது விபத்துகள் நிகழ்வதுடன், வன உயிரினங்களுக்கும் தொந்தரவு ஏற்படுகிறது.