வனப்பகுதியில் பரபரப்பு..ஒற்றை யானை வாகனங்களை துரத்துவதால் பாதுகாப்பாக செல்ல வனத்துறையினர் எச்சரிக்கை!
குன்றி செல்லும் வழியில் கடந்த 2 நாட்களாக ஒற்றை யானை சாலையில் உலா வந்தபடி வாகனங்களை துரத்தி வருகிறது.
கடம்பூர் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கடம்பூர் வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்துவருகின்றன.
குன்றி சாலை - முக்கிய போக்குவரத்து பகுதி
கடம்பூர் வனப்பகுதியில் குன்றி சாலை மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ளது. கடம்பூர் வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
யானைகள் கிராமத்தில் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்துதல்
வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் அவ்வப்போது கிராமத்துக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.
ஒற்றை யானை சாலையில் உலா - வாகன ஓட்டிகள் பீதி
இந்நிலையில் குன்றி செல்லும் வழியில் கடந்த 2 நாட்களாக ஒற்றை யானை சாலையில் உலா வந்தபடி வாகனங்களை துரத்தி வருகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பீதி அடைந்து உள்ளனர். யானை பார்ப்பதற்கு மிகவும் பெரிய தோற்றத்தில் பெரிய தந்தங்களுடன் இருப்பதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
யானைகள் இடம்பெயர்தல் - அதிக நடமாட்டம்
தற்போது யானைகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக திம்பம், ஆசனூர், குன்றி போன்ற வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது.
காலையில் வரும் வாகனங்களை நிறுத்தி பார்த்தல்
குறிப்பாக உணவு ஏதாவது உள்ளதா என காலையில் வரும் வாகனங்களை நிறுத்தி பார்த்து வருகிறது.
ஒற்றை யானை முகாமிட்டு அச்சுறுத்தல்
தற்போது குன்றி சாலையில் அடர்ந்த வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை ஒன்று கடந்த 2 நாட்களுக்கும் மேலாக அந்தப் பகுதியில் முகாமிட்டு வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது.
கவனமாக செல்ல வேண்டும் - வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை
எனவே குன்றி பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் வாகனங்களை எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் நிறுத்த வேண்டாம் என்றனர்.
வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - கோரிக்கை
இந்நிலையில் சாலை ஓரமாக சுற்றி வரும் ஒற்றை யானையை வனத்துறையினர் அடர்ந்தவனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.