போட்டி தேர்வு கருத்தரங்கில் 'வீடியோ கேம்'; மாணவர்களின் கவனக்குறைவு

மாநில அளவிலான போட்டி தேர்வுக்கான கருத்தரங்கு நடந்த பொது மாணவர்கள் கருத்தரங்கை கவனிக்காமல் மொபைலில் கேம் விளையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது;

Update: 2025-03-07 03:50 GMT

போட்டி தேர்வு கருத்தரங்கில் 'போர்': 'வீடியோ கேம்' ஆடிய மாணவர்கள்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பச்சாம்பாளையத்தில் மாநில அளவிலான போட்டித் தேர்வுக்கான கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் கவனமின்றி மொபைல் போன்களில் விளையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்தரங்கிற்கு அந்தியூர், பவானி, டி.என்.பாளையம், கோபி, ஆப்பக்கூடல், சத்தி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆறு தனியார் கல்லூரிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் அழைக்கப்பட்டிருந்தனர். விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

அமைச்சர்கள் விளக்கமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் பேசிக்கொண்டிருந்த நிலையில், கருத்தரங்கில் கலந்துகொண்ட சில மாணவர்கள் கண்ணும் கருத்துமாக மொபைல் போன்களில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. இது கருத்தரங்கின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

இது குறித்து சில மாணவர்களிடம் கேட்டபோது, "போட்டித் தேர்வுக்கான கருத்தரங்கு என்று சொல்லப்பட்டாலும், இரண்டு அமைச்சர்கள் மட்டுமே பேசினர். போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வது குறித்து அதற்கான நிபுணர்கள், ஆலோசகர்கள் யாரும் பங்கேற்கவில்லை. நிகழ்ச்சி போர் அடித்ததால், பல மாணவர்கள் மொபைல் போனில் கேம் விளையாடத் தொடங்கினர்" என்று தெரிவித்தனர்.

கல்வி ஆர்வலர்கள் கருத்துப்படி, இத்தகைய கருத்தரங்குகள் மாணவர்களுக்கு உண்மையான பயனளிக்க வேண்டுமெனில், வெறும் அரசியல் பிரமுகர்களின் உரைகளோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள், தேர்வு நிபுணர்கள், வழிகாட்டிகள் போன்றோரையும் அழைத்து உரையாற்ற செய்வது அவசியம் என்கின்றனர்.

மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் இத்தகைய கருத்தரங்குகள் பெயரளவிற்கு நடத்தப்படாமல், உரிய நிபுணர்கள், ஆலோசகர்களையும் பங்கேற்கச் செய்வது முழுமையான பயனை அளிக்கும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது. இத்தகைய மாற்றங்கள் வரும் காலங்களில் செய்யப்பட்டால், மாணவர்கள் உண்மையிலேயே பயனடையும் வகையில் கருத்தரங்குகள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டித் தேர்வுகளுக்கான தயார்நிலையை மாணவர்களிடையே உருவாக்குவது முக்கியமான நோக்கமாக இருந்தாலும், அதற்கான முறையான திட்டமிடல் இல்லாமல் நடத்தப்படும் நிகழ்ச்சிகளால் எதிர்பார்த்த பலன் கிடைக்காது என்பதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

Tags:    

Similar News