யானையின் தாக்குதலால் முதியவர் பலி: மலைகிராமங்களில் பதட்டம்!

கேர்மாளம் அருகே காடட்டி மலை கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேவப்பா (65) என்பவர் யானை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.;

Update: 2025-01-17 06:00 GMT

பொங்கல் அன்று நடந்த விபரீத சம்பவம்

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலை, கேர்மாளம் அருகே காடட்டி மலை கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேவப்பா (65). பொங்கல் அன்று அதே பகுதியைச் சேர்ந்த 4 பேருடன் வனப்பகுதிக்குள் விறகு சேகரிக்கச் சென்றுள்ளார். அடர்ந்த வனப்பகுதியில் அவர்கள் விறகு சேகரித்துக் கொண்டு இருந்தனர்.

ஒற்றை யானை திடீர் தாக்குதல்

அப்போது புதருக்குள் மறைந்திருந்த ஒற்றை யானை வெளியே வந்து மாதேவப்பா மற்றும் அவருடன் வந்தவர்களை விரட்டத் தொடங்கியது. திடீரென யானையைப் பார்த்து அதிர்ச்சியில் அனைவரும் ஆளுக்கு ஒரு திசையாக ஓடினர். ஆனால் மாதேவப்பா யானையிடம் சிக்கிக்கொண்டார்.

மாதேவப்பா பரிதாப மரணம்

இதில் யானை மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த ஒற்றை யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

அதிர்ச்சியில் துணையாட்கள்

மாதேவப்பாவுடன் சென்றவர்கள் மீண்டும் வந்து பார்த்தபோது அவர் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கேர்மாளம் வனத்துறையினர் மற்றும் கடம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

கடம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாதேவப்பா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோகமான பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகை அன்று யானை தாக்கியதில் முதியவர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News