அரசு நிலத்தில் கட்டுமானம், மரம் வெட்டும் சி.எஸ்.ஐ., நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை ..!
ஈரோட்டில் அரசு நிலத்தில் இருந்த மரத்தை வெட்டிய சி.எஸ்.ஐ நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரிய மாரியம்மன் கோயில் நிலமீட்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.;
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு
ஈரோடு ஸ்ரீபெரிய மாரியம்மன் கோவில் நிலமீட்பு இயக்கம் சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு வழங்கி கூறியதாவது:
ஈரோடு, பெரிய மாரியம்மன் கோவிலுக்கு பின்புறம், 12.66 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்நிலம் குறித்து சி.எஸ்.ஐ., நிர்வாகம், தங்களது நிலம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு, 2022 டிச.,2ல்தள்ளுபடியானது.
சி.எஸ்.ஐ., நிர்வாகம் புதிய பிரமாண்ட இரும்பு பைப்புடன் போர்டு அமைத்தது
இந்நிலையில் இரு நாட்களுக்கு முன் அந்நிலத்தில் 'ஈரோடு கிறிஸ்டியன் காலேஜ்' என்ற புதிய பிரமாண்ட இரும்பு பைப்புடன் போர்டு அமைத்துள்ளனர். தவிர நிலத்தில் உள்ள மரங்களை வெட்டி அகற்றினர்.
ஏற்கனவே ஒருமுறை இதுபோன்ற மரத்தை வெட்டியபோது, புகாரின் அடிப்படையில் சி.எஸ்.ஐ., நிர்வாகத்துக்கு, ஈரோடு ஆர்.டி.ஓ., 35,787 ரூபாய் அபராதம் செலுத்த உத்தரவிட்டார். அத்தொகையை இதுவரை சி.எஸ்.ஐ., நிர்வாகம் கட்டியதாக தெரியவில்லை.
இந்நிலையில் மீண்டும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் சி.எஸ்.ஐ., நிர்வாகம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மரத்தை வெட்டியதற்கு அபராதம் விதித்து, புதிதாக வைத்த பெயர் பலகையை அகற்ற வேண்டும்.