வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் மாநகராட்சி பில் கலெக்டர் மீீது புகார்!
வாடகை வீட்டை காலி செய்ய மறுப்பதாக, ஈரோடு மாநகராட்சி பில் கலெக்டர் மீது புகார் தெரிவித்து கலெக்டரிடம் மனு தரப்பட்டது.;
ஈரோடு : வாடகை வீட்டை காலி செய்ய மறுப்பதாக, ஈரோடு மாநகராட்சி பில் கலெக்டர் மீது புகார் தெரிவித்து கலெக்டரிடம் மனு தரப்பட்டது.
ஈரோடு, சூரம்பட்டி, கருப்பணசாமி கோவில் வீதியை சேர்ந்த பாஸ்கர் மனைவி லதா (61) , தனது மன வளர்ச்சி குன்றிய மகள், உடல் நலம் பாதித்த முதியோருடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம், நேற்று மனு வழங்கி கூறியதாவது:
ஈரோடு, குமலன்குட்டை செல்வம் நகரில் எனது வீடு உள்ளது. இரண்டு வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளேன். கீழ் தளத்தில் ஈரோடு மாநகராட்சி இரண்டாவது மண்டல அலுவலக பில் கலெக்டராக பணி செய்யும் முகேஷ் வாடகைக்கு வசிக்கிறார்.
எனது வயது முதிர்வு, முதுகு தண்டுவட பாதிப்பு போன்ற பிரச்சனையால், கீழ் தளத்தில் உள்ள வீட்டுக்கு செல்ல திட்டமிட்டோம். முன்னதாக வீட்டை சீரமைப்பு செய்யவும் திட்டமிட்டு, வீட்டை காலி செய்து தரும்படி, மூன்று மாதங்களுக்கு முன் தெரிவித்தோம்.
பிறகு ஆறு மாதம் அவகாசம் கொடுத்தும் காலி செய்ய மறுக்கிறார். அரசு பணியில் உள்ளதால், வீட்டை காலி செய்து தர முடியாது எனக்கூறி மிரட்டுகிறார். இதுபற்றி விசாரித்து வீட்டை காலி செய்து தர வேண்டும் , இவ்வாறு கூறினார்.