ஈரோட்டில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழ முயன்றவரை காப்பாற்றிய போலீசார்

ஓடும் ரயிலில் இருந்து தவறி தண்டவாளத்தில் விழ முயன்ற வடமாநில வாலிபரை காப்பாற்றிய போலீசாரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Update: 2022-01-22 07:30 GMT
ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த நபரை காப்பாற்றும் காவலர். 

ஈரோடு வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக வட மாநிலத்திலிருந்து தினமும் 50-க்கும் மேற்பட்ட ரயில்கள் ஈரோடு வழியாக வந்து செல்கின்றன. இதில் நூற்றுக்கணக்கான வட மாநிலத்தவர்கள் பயணம் மேற்கொண்டு ஈரோட்டில் வந்து இறங்குகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் செகந்தராபாத்திலிருந்து, திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் கிளம்பியது. இந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் அசோக் தாஸ் என்ற வாலிபர் முன்பதிவு செய்து பணித்துள்ளார். இவர் ஈரோட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். விடுமுறைக்கு ஊருக்கு சென்றவர் மீண்டும் ஈரோட்டுக்கு திரும்பி ரயிலில் வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் ஈரோடு ரயில் நிலையத்திற்கு அசோக்தாஸ் பயணம் செய்த ரெயில் வந்து நின்றது. அசோக் தாஸ் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். இதனால் ரயில் ஈரோடுக்கு வந்தது, அவருக்கு தெரியவில்லை. பின்னர் ரயில் பயணிகளை இறக்கி கொண்டு கிளம்பத் தொடங்கியது.

ரயில் கிளம்ப தொடங்கியதும், கண்விழித்து பார்த்த அசோக் தாஸ் ரயில் கிளம்பியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவசரமாக எழுந்து தனது உடமைகளை முதலில் வெளியே வீசினார். பின்னர் அசோக் தாஸ் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றார். அப்போது தவறி நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையே விழுந்தார்.

அப்போது அங்கு ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த தலைமை காவலர்கள் பழனிசாமி மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு அசோக்தாஸ் பிடித்து இழுத்து அவரை காப்பாற்றினர். பின்னர் அவருக்கு புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தனர். தற்போது ரயில்வே போலீசார் வடமாநில வாலிபர் காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

துரிதமாக செயல்பட்டு வடமாநில வாலிபரை காப்பாற்றிய தலைமை காவலர்களை போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News