கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு: ஈரோட்டில் போலீசாரின் அதிரடி நடவடிக்கை!
ஈரோட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.
ஈரோடு : 2025 புத்தாண்டு பிறக்க இன்னும் 4 நாட்களே உள்ளன. இதனால் புத்தாண்டை கொண்டாட மக்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். ஈரோடு மாவட்ட மக்களும் புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள் மற்றும் ரிசார்ட்டுகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தை விமர்சையாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
ஈரோடு மாநகரில் புத்தாண்டு கொண்டாட்டம்
ஈரோடு மாநகர் பகுதியில் பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் புத்தாண்டு அன்று நள்ளிரவில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு புத்தாண்டை வரவேற்று கொண்டாடுவார்கள். இளம் பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள், முதியவர்கள் என வயது பேதமின்றி புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஒருவர் ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் தவறான நடத்தைகள்
அந்த சமயங்களில் இளைஞர்கள் சிலர் பைக் ரேசில் ஈடுபடுவது, பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவது, கூட்டத்தை பயன்படுத்தி சிலர் திருட்டு சம்பவங்களை அரங்கேற்றுவது போன்ற செயல்கள் நடக்க வாய்ப்புள்ளது.
போலீசார் கட்டுப்பாடுகள்
தவறான நடத்தைகளை தடுக்கும் விதமாக ஈரோட்டில் புத்தாண்டு அன்று இரவு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது. மது அருந்தி வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.