நான் என்ன தவறு செய்தேன்?: கண்ணீர் விட்ட எம்எல்ஏ
எம்எல்ஏ. தோப்பு வெங்கடாச்சலம் தொண்டர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும் போது, நான் என்ன தவறு செய்தேன் எனக்கு சீட் வழங்காதது ஏன் என கேட்டு கண்ணீர் மல்க அழுதார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுகவில் பெருந்துறை தொகுதியில் மீண்டும் சீட் வழங்காதது குறித்து தனது ஆதரவாளர்களுடன் பெருந்துறை எம்எல்ஏ., தோப்பு வெங்கடாசலம் இன்று முக்கிய ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். அப்போது கூட்டத்தில் எம்எல்ஏ. தோப்பு வெங்கடாச்சலம், பேசிக்கொண்டிருக்கும் போது, நான் என்ன தவறு செய்தேன் எனக்கு சீட் வழங்காதது ஏன் என கூறியவாறு கண்ணீர் மல்க அழுதார். தொண்டர்களும் அழுதனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து மீண்டும் பேசிய தோப்பு என்.டி. வெங்கடாசலம்,பெருந்துறை தொகுதிக்கு எனக்கு மீண்டும் சீட் வழங்கப்படாததற்கு "உட்கட்சி அரசியல்" என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். நான் கட்சிக்கும் இயக்கத்திற்கும் பொதுமக்களுக்கும் தொகுதி மக்களுக்கும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் என அனைவருக்கும் விசுவாசமாக இருக்கிறேன்.
பெருந்துறை தொகுதியில் எனக்கு மீண்டும் சீட்டு வழங்காததற்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சரும் பவானி எம்எல்ஏ.,வுமான கே.சி. கருப்பண்ணன் தான் காரணம்.பெருந்துறை தொகுதிக்கு கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வருவதை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் தடுத்தார் என்பதால்தான் எனக்கும் அவருக்கும் விரோதம் இருந்ததே தவிர தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை.
தற்போது பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் சீட் வழங்கப்பட்டுள்ளவர், பெருந்துறை தொகுதிக்கு கொண்டு வந்த கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை திட்டத்தை எதிர்ப்பவர்களோடு கூட்டு சேர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்; பெருந்துறை ஊராட்சி ஒன்றிய சேர்மன் பதவிக்கு அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளருக்கு எதிராக மனுத்தாக்கல் செய்தவர்; மேலும் பெருந்துறையில் 300 ஏக்கர் நிலம் முறைகேடாக பதிவு செய்து வீட்டு மனைகளாக பதிவு செய்துள்ளது தற்போதைய வேட்பாளர் தான்.
கடந்த 4 நாட்களாக பெருந்துறை தொகுதியில் அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த பிரச்சாரத்திற்கு இதுவரை என்னையும் எனது ஆதரவாளர்களையும் அழைக்கவில்லை இது மன வேதனை அளிக்கிறது. நான் மாற்றுக் கட்சியை சேர்ந்தவன் அல்ல. இந்த நிலை என்னோடு போகட்டும், இனி எந்த அதிமுக தொண்டனுக்கும் இதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது. நான் என்ன தவறு செய்தேன், எனக்கு சீட் மறுக்கப்பட்டது என தெரியவில்லை என கண்ணீரோடு பேசினார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தோப்பு வெங்கடாச்சலம், எனக்கு சீட் வழங்காமல் இருந்தால் தான் அதிமுக ஆட்சிக்கு வரமுடியும் என அவர்கள் நினைத்திருந்தால் அதனை நான் முழு சம்மதத்துடன் ஏற்றுக் கொள்கிறேன். அதிமுக ஆட்சி அமைய வேண்டும். தலைமை மீது எந்த குற்றச்சாட்டும் நான் வைக்கவில்லை. எனது தொண்டர்கள் சீட்டு வழங்க வேண்டும் என கேட்கிறார்கள். பெருந்துறை தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இதுவரை என்னை அழைக்கவில்லை. தோப்பு வெங்கடாச்சலம் பிரச்சாரம் செய்து தான் பெருந்துறையில் ஜெயிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என அமைச்சர் கருப்பணன் கூறியுள்ளார். இயக்கம் பெரிதா பதவி பெரிதா என்றால் எனக்கு இயக்கம் தான் பெரிது. எனக்கு சீட் வழங்காதது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளேன். இந்த இயக்கம் நல்ல பாதையில் செல்ல வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். தொண்டர்களின் விருப்பம் என்றார்.