மீறப்படும் தேர்தல் விதிமுறை: தோப்பு வெங்கடாசலம் குற்றச்சாட்டு
தேர்தல் விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்படுவதாக தோப்பு வெங்கடாசலம் குற்றச்சாட்டு
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் போட்டியிடும் அதிமுக முன்னாள் அமைச்சரும் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினருமான தோப்பு வெங்கடாசலம் இத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இன்று தனது வாக்குபதிவை செய்த அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது தோப்பு வெங்கடாசலம் போட்டியிலிருந்து விலகுவதாக துண்டு பிரசுரங்களை அதிமுகவினர் விடிய விடிய தெருக்கள் தோறும் விநியோகம் செய்ததாகவும், இது குறித்து தேர்தல் அலுவலர்களிடம் பலமுறை தொடர்பு கொண்டு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறினார்.
வாக்குபதிவு மையத்தில் வாக்கு பதிவு இயந்திரங்களை ஏற்கெனவே கொடுக்கப்பட்ட வேட்பாளர்கள் பெயர் வரிசைப்படி வைக்காமல் ஆளும் கட்சியினர் வாக்கு அளிக்க வசதியாக வாக்குபதிவு இயந்திரங்களை மாற்றி வைத்துள்ளதாகவும் இதுகுறித்து புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையம் எடுக்கவில்லை என கூறிய அவர் இத்தேர்தலில் தேர்தல் விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.