ஈரோட்டில் 45 நாளில் கொரோனா மருத்துவமனை கட்டி சாதனை- லிம்கா புத்தகத்தில் இடம் பெற வாய்ப்பு

ஈரோட்டில், 45 நாட்களில் 70 ஆயிரம் சதுரடியில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கொரோனா மருத்துவமனை கட்டி முடித்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-07-05 08:30 GMT
  • whatsapp icon

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. கொரோனா  இரண்டாவது அலையின்போது,  ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், சேலம், நாமக்கல் என பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற வந்தனர், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்த படுக்கை வசதிகள் அனைத்தும் நிரம்பின.

மாவட்ட நிர்வாகம் மற்றும் ரேட்டரி கிளப் இணைந்து,  100 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனையை அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சைபெற அதிகளவில் நோயாளிகள் வரத்தொடங்கியதால் படுக்கை வசதி பற்றாக்குறை ஏற்பட்டது.

இச்சூழலில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் ஒன்றிணைந்து,  சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில்,  70 ஆயிரம் சதுரடியில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்திலேயே ஒரு பிரம்மாண்டமான கொரோனா மருத்துவமனை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வந்த இப்பணிகள் கிட்டதட்ட 45 நாட்களில் முடிவுற்று தற்போது ஆக்சிஜன் மற்றும் வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய 400 படுக்கைகள் வசிதிகளுடன் பிரம்மாண்ட மருத்துவமனையாக உருவாக்கியுள்ளது.

உலகத்திலேயே,  45 நாட்களில் 70 ஆயிரம் சதுரடியில் 400 படுக்கைகள் கொண்ட நிரந்தர மருத்துவமனை ஒன்று உருவாக்கப்பட்டது என்பது இதுவே முதல் முறை என்று ரோட்டரி அமைப்பினர் தெரிவித்துள்ளனர். எனவே இந்த சாதனையை ஆசியன் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் வெளியிட முயற்சி நடந்து வருவதாகவும்,   லிம்கா ரெக்கார்டு புத்தகம் தரப்பில், மருந்துவமனையை பார்வையிட இந்த வாரம் வர உள்ளதாகவும், ரோட்டரி அமைப்பினர் தகவல் தெரிவித்தனர்.

கொரோனா நோய்த்தொற்று காலத்திற்கு பிறகு இந்த மருத்துவமனையில் அனைத்து வகையான நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறிய ரேட்டரி அமைப்பினர்,  இந்த மருத்துவமனையை வரும் காலங்களில் ரோட்டரி அமைப்பினரே பராமரிக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரி உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News