ஈரோட்டில் மே மாதத்தில் மட்டும் 35 ஆயிரம் பேருக்கு கொரோனா
ஈரோட்டில் மே மாதத்தில் மட்டும் 35 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று…193 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை வேகம் எடுத்துள்ளது. சென்னை கோவை போன்ற பெருநகரங்களுக்கு போட்டியாக தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் தினசரி பாதிப்பு குறைந்து வந்தாலும் ஈரோட்டில் தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. இதே போல் தினமும் அதிக அளவில் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.
முதலில் மா நகர் பகுதியில் வேகமாக பரவிய தொற்று தற்போது கிராமம் முழுவதும் குடும்பம் குடும்பமாக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறையினர், மாநகராட்சி ஆகியவை ஒன்றிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை தினசரி பாதிப்பு 100-க்கு கீழ்தான் இருந்தது. ஆனால் ஏப்ரல் மாதத்தில் இருந்து தினசரி பாதிப்பு 200 -ஐ தாண்ட தொடங்கியது. மே மாதம் தொடக்கத்தில் இருந்து கொரோனா தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. 300, 400, 500 என படிப்படியாக உயர்ந்து தற்போது 1,700 தொட்டுள்ளது. இதைப்போல் உயிரிழப்பும் மே மாதத்தில் தான் அதிகளவு ஏற்பட்டுள்ளது. மே மாதம் 1ஆம் தேதியிலிருந்து 31ம் தேதி வரை மட்டும் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்து 543 ஆகும்.
இதே காலகட்டத்தில் நோய் பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆயிரத்து 528 ஆக உள்ளது. இதை போல் மே மாதத்தில் மட்டும் 193 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளனர். ஈரோட்டில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 56 ஆயிரத்து 644 ஆக உயர்ந்துள்ளது. 40 ஆயிரத்து 408 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 348 இதுவரை உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 15 ஆயிரத்து 888 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்