பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் காங்கிஸரர் கண்டன ஆர்ப்பாட்டம்
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து 50 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.;
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இந்தியா முழுவதும் உள்ள தலைநகரங்கள், அந்தந்த மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி அறிவித்திருந்தார்.
தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்தார். அதன்படி ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் ஈரோடு ,மொடக்குறிச்சி, அரச்சலூர், குன்னத்தூர், செங்கப்பள்ளி, பெருந்துறை, சென்னிமலை உள்ளிட்ட 50 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள்.ஜி.ராஜன் தலைமையில் பெருந்துறை பேருந்து நிலையம் எதிரில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்க பெட்ரோல் பங்கிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை கண்டித்தும் கலால் வரியை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனை தொடர்ந்து 100 ரூபாய் தொடுகின்ற அளவுக்கு பெட்ரோல் விலையை உயர்த்தியதே மத்திய அரசின் சாதனை எனக்கூறி பெட்ரோல் பங்கிற்கு வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகளை வழங்கி நூதன முறையில் தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர் .