தோப்பு வெங்கடாசலம் மீது பெருந்துறை எம்எல்ஏ டிஎஸ்பியிடம் புகார்
அதிமுகவினரை மிரட்டுவதாக தோப்பு வெங்கடாசலம் மீது, டிஎஸ்பி யிடம் பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து வந்த, பெருந்துறை தொகுதி முன்னாள் எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம், அண்மையில் தனது ஆதரவாளர்கள் 852 பேருடன் திமுகவில் இணைந்தார். இந்த செய்தி குறித்து காலை நாளிதழில் ஒன்றில் வெளியான செய்தியில், 852 பேர் கொண்ட அதிமுகவினர் பட்டியல் இடம் பெற்றிருந்தது.
இதை பார்த்து, முறைகேடாக பெயர் பட்டியலை அளித்து திமுகவில் தோப்பு வெங்கடாசலம் உறுப்பினராகியிருப்பதாக, ஒரு தரப்பினர் கூறினர். குறிப்பாக ஊத்துக்குளி மற்றும் சென்னிமலை ஒன்றியத்தில் உள்ள மூன்று ஒன்றியக்குழு உறுப்பினர்கள், திமுகவுக்கு சென்றதாக தவறான பட்டியல் கொடுத்துள்ளதாக புகார் எழுந்தது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள், கிளைக் கழக செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் ஆகியோரின் அனுமதி இல்லாமலேயே அவர்களின் பெயரை திமுகவில் இணைந்ததாக தோப்பு வெங்கடாசலம் வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தற்போது அதிமுக கட்சியினரை திமுகவில் உறுப்பினர் ஆகுமாறு நேரில் சென்றும், தொலைபேசி மூலமாகவும் பலரை தோப்பு வெங்கடாசலம் தொடர்பு கொண்டு, "ஆளுங்கட்சியை எதிர்த்து அரசியல் செய்ய முடியாது; என்னோடு திமுகவுக்கு வாருங்கள் இல்லையேல் உங்கள் மீது வழக்கு பாயும்" என மிரட்டுவதாகவும், தேவைப்பட்டால் பணம் கொடுப்பதாகக்கூறி, கட்சியை சேர்ந்த பலரை விலை பேசி வருவதாக, டிஎஸ்பி யிடம் பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார்.