கொரோனா தடுப்பு: கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு முதல்வர் நாளை வருகை

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு வருகை தர உள்ளார்.

Update: 2021-05-29 11:47 GMT

கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மேற்கு மண்டல மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கோவை, ஈரோடு உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக தனி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து உள்ளார்.
இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு வருகை தர உள்ளார். இதற்காக,  இன்று இரவு 8.30 மணிக்கு மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோயம்புத்தூர் வருகிறார்.

பின்னர் அங்கிருந்து ஈரோடுக்கு கார் மூலம் வருகிறார். இரவு ஈரோடு காலிங்கராயன் அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை காலை 10 மணி அளவில், பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்கிறார்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கூடுதல் வசதியுடன் கட்டப்படும் கட்டிடப் பணிகளை பார்வையிடுகிறார். பின்னர் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிகிறார். அதை தொடர்ந்து, மு. க. ஸ்டாலின் திருப்பூர் சென்று ஆய்வு செய்கிறார்.

திருப்பூரை தொடர்ந்து கோவை சி.எஸ்.ஐ மருத்துவமனைக்கு சென்று மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். நாளை மாலை 4 மணி அளவில் கோவை, திருப்பூர், நீலகிரி ,ஈரோடு ஆகிய 4 மாவட்ட அதிகாரிகளுடன், ஆய்வு கூட்டம் நடத்துகிறார். பின்னர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திக்கிறார். அதைத்தொடர்ந்து, நாளை இரவே விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

Tags:    

Similar News