அதிமுக எம்.எல்.ஏ சுயேட்சையாக வேட்புமனு தாக்கல்
பெருந்துறை அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் அதிமுக வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பெருந்துறை சட்டமன்ற உறுப்பினராக தோப்பு வெங்கடாச்சலம் இருந்து வருகின்றார். இவர் மீண்டும் தொகுதியில் போட்டியிட அதிமுக தலைமை வாய்ப்பு வழங்கவில்லை. இதையடுத்து தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்திய தோப்பு வெங்கடாச்சலம் சுயேட்சையாக போட்டியிடுவது என்று முடிவு செய்தார்.
இதையடுத்து பெருந்துறை நால்ரோட்டில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக வந்த தோப்புவெங்கடாச்சலம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான இலாஹிஜானிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் தோப்புவெங்கடாச்சலம் கூறியதாவது, அதிமுகவில் உழைத்தவர்களுக்கு வாய்ப்பு தராதது மனவேதனை அளிக்கிறது. என்னால் பயன் பெற்றவர்கள் என்னை நினைக்காமல் போகலாம். ஆனால் மக்கள் என் பணியை நினைத்து பாராட்டுகிறார்கள். 10 ஆண்டுகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தந்துள்ளேன். தொகுதியில் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. ஒரு எம்.எல்.ஏ எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்துள்ளேன். தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்கள் செய்துள்ளதால் பொதுமக்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்பதால் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளேன். இவ்வாறு கூறினார்.