ஈரோட்டில் மஞ்சள் ஏலம் மீண்டும் துவக்கம் : குவிண்டாலுக்கு 7,500 ரூபாய் வரை விற்பனை
ஈரோட்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 45 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மஞ்சள் ஏலம் இன்று பாதுகாப்பு வழிமுறைகளுடன் துவங்கியது.;
தேசிய அளவில் அதிக மஞ்சள் உற்பத்தி செய்யும் மாநிலம் தமிழகம். இதில் அதிக மஞ்சள் உற்பத்தி செய்யும் பகுதி ஈரோடு என்பதால், இம்மாவட்டத்தை, 'மஞ்சள் மாவட்டம்' என்றும்,'மஞ்சள் மாநகரம்' என்றும் அழைப்பார்கள்.
தமிழகத்தில் ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், கரூர், கோவை போன்ற மாவட்டங்களில் மஞ்சள் விளைகிறது. மற்ற மாவட்டங்களில் விளைவதைவிட ஈரோடு மாவட்டத்தில் அதிகமாக மஞ்சள் விளைவதுடன், தரமானதாக உள்ளதால், இங்குள்ள மஞ்சளுக்கு தனி விலை கிடைக்கிறது. மேலும், ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது. இதனால், மற்ற மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் கூட, ஈரோட்டுக்கு மஞ்சளை கொண்டு வந்துதான், மஞ்சளை விற்பனை செய்கின்றனர்.
கொரோனா இரண்டாவது அலை, பொது ஊரடங்கு காரணமாக, கடந்த 45 நாட்களாக ஏலம் நிறுத்தப்பட்டு, சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான மஞ்சள் தேக்கமடைந்தன. இந்நிலையில் மீண்டும் மஞ்சள் ஏலம் நடைபெற அனுமதி வழங்கக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி, தமிழக அரசின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் படி, ஏலம் நடத்திக்கொள்ள அரசு அனுமதி அளித்தது.
இதையடுத்து இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள மஞ்சள் சந்தைகளில் ஏலம் துவங்கியது. அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட்டது. மேலும், சுகாதாரத்துறையினர் சார்பில், கொரோனா பரிசோதனை செய்த பின்னரே விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அனுமதிக்கப்பட்டனர். பெருந்துறை மஞ்சள் ஏலத்தில் மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு 6,500 முதல் 7,500 ரூபாய் வரை ஏலம் போனதாக மஞ்சள் வணிக வளாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மஞ்சள் ஏலம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் ஏலம் நடந்ததால் அதிகளவிலான விவசாயிகள் ஏலத்தில் பங்கேற்று தாங்கள் விளைவித்த மஞ்சளை விற்று பயனடைந்தனர்.