ஈரோடு அருகே சரக்கு வாகனங்கள் மோதி விபத்து
ஈரோடு அருகே சரக்கு வாகனங்கள் மோதிய விபத்தில் லாரியின் இடையே சிக்கிய ஓட்டுநர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு.;
மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ஓட்டுநர் வீரமணி. இவர் இன்று ஈச்சர் வண்டியில் பழனியிலிருந்து ஈரோடு அடுத்துள்ள ஆப்பக்கூடல் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள காஞ்சிகோயில் பைபாஸில் சாலையை கடக்க முயற்சித்துள்ளார். அப்போது பைபாஸில் கேரளாவிலிருந்து ஆந்திராவிற்கு மரப்பலகைகள் ஏற்றிச் சென்று கொண்டிருந்த லாரி எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கேரளாவில் இருந்து ஆந்திரா சென்ற லாரியின் ஓட்டுநர் மல்லேஸ்வர் லாரிக்குள் சிக்கிக்கொண்டார். மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இடர்பாடுகளுக்கிடையே சிக்கியுள்ள ஓட்டுநரை காப்பாற்ற தீயணைத்துறையினருக்கு தகவல் தெிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிரேன் உதவியுடன் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேல் போராடி ஓட்டுநரை சிறு காயங்களோடு உயிருடன் மீட்டனர். பின்னர் விபத்தில் படுகாயமடைந்த லாரி ஓட்டுநர்கள் இருவர் உட்பட மூன்று பேரை பெருந்துறையிலுள்ள ஐஆர்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.