சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச விழா

Update: 2021-01-28 08:00 GMT

பிரசித்தி பெற்ற சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச விழா கொண்டாடப்பட்டது.

தை மாத பெளர்ணமியான இன்று தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் தைப்பூச விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கந்தசஷ்டி அரங்கேற்றப்பட்டதாகக் கூறப்படும் ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக இன்று அதிகாலை 3 மணிக்கு மலையடிவாரத்திலுள்ள கைலாசநாதர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு பக்தர்கள் முன்னிலையில் பல்வேறு திரவியப் பொருட்களைக் கொண்டு அபிசேகம் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் சுவாமிகளுக்கு பல்வேறு மலர்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் மேற்கொள்ளப்பட்டு மகா தீபாராதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த சுவாமிகளை பக்தர்கள் தோளில் சுமந்தபடி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்கிற பக்தி முழக்கங்களுடன் கோவிலிலிருந்து தேருக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் மங்கள வாத்ய இசை முழங்க தேரை மூன்று முறை வலம் வந்த சுவாமிகள் தேரில் படியமர்த்தப்பட்டனர். தேரில் படியமர்த்தப்பட்ட வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு சிறப்புப் பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து பக்தர்கள் முருகன் புகழ் பாடும் முழக்கங்களை எழுப்பியபடி தேரின் வடத்தை இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் அருகிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் விரதமிருந்து பாதயாத்திரையாக கோவிலுக்கு காவடியாட்டம், கரகங்களுடன் வந்து சுவாமியை தரிசித்தபடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேற்குரத வீதியில் தொடங்கிய தேரோட்டம் முக்கிய வீதிகள் வழியாக வந்து தெற்கு ரத வீதியில் நிலை நிறுத்தப்பட்டது.

தேரோட்ட நிகழ்ச்சியில் ஈரோடு,திருப்பூர்,நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர். கொரோனா நோய்ப்பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த தேரோட்டம் கட்டுப்பாடுகளுடன் நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டதையடுத்து குறைவான கூட்டத்துடன் தேரோட்டம் நடைபெற்றது.

Tags:    

Similar News