பொது சுகாதார ஆய்வகம் அமைக்கும் பணியை துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி
நகர் நல வாழ்வு மையம், பொது சுகாதார ஆய்வகம் அமைக்கும் பணியினை அமைச்சர் முத்துசாமி பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாநகர் பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் தலா 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 20 நகர்புற சுகாதார நல வாழ்வு மையமும், தலா 22 லட்சம் மதிப்பீட்டில் 2 மாநகர பொது சுகாதார ஆய்வகமும் அமைக்கப்பட உள்ளது. இதற்கென 5.88 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்குவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் திட்ட பணிகள் நடைபெறும் இடங்களை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில் ஈரோடு எம்பி கணேசமூர்த்தி, கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா, மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.