பத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் இறங்கிய பக்தர்கள்

ஈரோடு பத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் விழா: விரதம் மற்றும் வழிபாட்டில் பக்தர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்;

Update: 2025-03-13 06:50 GMT

ஈரோடு பத்ரகாளியம்மன் கோவில் விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கள்ளுக்கடைமேடு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவிலில் நடைபெற்ற குண்டம் திருவிழாவில் நேற்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் கோவிலில் மாசி மாத குண்டம் மற்றும் பொங்கல் திருவிழா கடந்த 25ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து கடந்த 3ஆம் தேதி கோவிலின் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அன்று முதல் தினமும் அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்று வருகிறது. மேலும், அக்னி கபாலம் நகர் வலம் வரும் நிகழ்வும் தொடர்ந்து நடந்து வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழாவுக்காக நேற்று முன்தினம் குண்டம் பற்ற வைக்கப்பட்டது. இதற்காக பொதுமக்கள் விறகு மற்றும் பூஜைப் பொருட்களை காணிக்கையாக வழங்கினர். நேற்று அதிகாலையில் நடைபெற்ற குண்டம் திருவிழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.

கோவிலின் தலைமைப் பூசாரி உட்பட அனைத்து பூசாரிகளும் முதலில் குண்டம் இறங்கிய பின்னர், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாலை வரை தொடர்ந்து குண்டம் இறங்கி வழிபட்டனர். இதைத் தொடர்ந்து பலரும் பொங்கல் வைத்து அம்மனுக்கு வழிபாடு செய்தனர்.

Tags:    

Similar News