பெருந்துறையில் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் விழா
பெருந்துறையில் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளுக்கு அஞ்சலிகள் – மக்களுக்கு அன்னதானம்;
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டசபை தொகுதி சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பெருந்துறை ஒன்றிய செயலாளர்களான அருள்ஜோதி செல்வராஜ், ரஞ்சித்ராஜ், விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழா தொடக்கமாக எம்.எல்.ஏ. அலுவலகத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதா உருவப்படங்களுக்கு கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட டிராக்டர் வாகனத்தில் பிரமாண்ட ஜெயலலிதா உருவப்படத்துடன் ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது. இந்த ஊர்வலத்தில் தாரை தப்பட்டை, பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், கரகாட்டம் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் பல்வேறு கலைஞர்கள் ஆடல் பாடலுடன் கலந்து கொண்டு விழாவை மேலும் சிறப்பித்தனர்.
ஊர்வலம் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நிறைவடைந்ததும் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பிறந்தநாள் கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாக குலுக்கல் முறையில் மூன்று அதிர்ஷ்டசாலிகளுக்கு தங்க நாணயங்கள் வழங்கப்பட்டதோடு, பீரோ, கிரைண்டர், மிக்ஸி, மின் விசிறி உள்ளிட்ட 77 சிறப்பு பரிசுகளும், 770 பேருக்கு கூடுதல் பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டன. இந்த விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுதுரை, நகர செயலாளர்கள் கல்யாணசுந்தரம், பழனிசாமி, சிவசுப்பிரமணியம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அருணாச்சலம், ஒன்றிய துணை செயலாளர் அன்பரசு, பெருந்துறை யூனியன் முன்னாள் சேர்மேன் சாந்தி ஜெயராஜ், முன்னாள் துணை சேர்மேன் உமா மகேஸ்வரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை வெற்றிகரமாக்கினர்.