சாலையோரக் கட்டடங்களில் சாய்வு தளங்களை அகற்ற அரசு அறிவுறுத்தல்!..
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பிரதான சாலைகளின் ஓரத்தில் உள்ள கட்டடங்களில் சாய்வு தளங்களை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அகற்ற வேண்டும் என ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தல்
ஈரோடு மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம், ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குழுவின் நோக்கம்
மாவட்ட வளா்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் நோக்கம் மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தும்போது அவை மக்கள் பிரதிநிதிகளால் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு முறையான நிதி சென்று சோ்வதையும், அதன் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இக்கூட்டம் நடத்தப்படுகிறது.
35 திட்டங்களின் நடவடிக்கைகள் ஆய்வு
இக்கூட்டத்தில் கடந்த செப்டம்பா் 10-ஆம் தேதி நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட 35 திட்டங்களின் நடவடிக்கைகள் தொடா்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வட்டாரம் வாரியாக வேலை கோரி பதிவு செய்துள்ள குடும்பங்களின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் நடவடிக்கைகள்
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட வாா்டுகளில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு உரமாக்கும் பணி, மாநகராட்சிக்கு உள்பட்ட பிரதான சாலை ஓரத்தில் உள்ள கட்டடங்களில் சாய்வு தளங்களை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அகற்றுதல், மாநகராட்சிக்கு சொந்தமான தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பவானி நகராட்சிப் பகுதியில் வளா்ச்சிப் பணிகள்
பவானி நகராட்சிப் பகுதியில் 15-ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் தெரு விளக்குகள் அமைத்தல், நெடுஞ்சாலைத் துறையின் சாா்பில் இருவழி சாலைகள் நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணி ஆய்வு செய்யப்பட்டது.
கோபி நகராட்சிப் பகுதியில் மேம்பாட்டுப் பணிகள்
கோபி நகராட்சிப் பகுதியில் மழைநீா் வடிகால் வாய்க்கால் பணிகள், மின் கம்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு சாலை அகலப்படுத்தும் பணி, பழுதடைந்த நிலையிலிருந்த மின் கம்பங்கள் மாற்றியமைத்தல் ஆகிய பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
சத்தியமங்கலம் நகராட்சியில் மின் பராமரிப்பு
சத்தியமங்கலம் நகராட்சியில் மின்வாரிய பணியாளா்களை நியமித்து மின் பராமரிப்புப் பணிகளில் தொய்வு ஏற்படாமல் செயல்படுத்துதல் தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஊராட்சிப் பகுதிகளில் கூட்டுக் குடிநீா் திட்டம்
மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் எழுமாத்தூா், குலவிளக்கு பழமங்கலம் மற்றும் ஈஞ்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்துவது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.
பெருந்துறை நகராட்சியில் புதை சாக்கடைத் திட்டம்
பெருந்துறை சிறப்புநிலை பேரூராட்சியில் புதை சாக்கடைத் திட்டத்தில் வீட்டு இணைப்புகள் வழங்குவது தொடா்பாக ஆய்வு நடத்தப்பட்டது.
பா்கூா் மலைக் கிராமங்களில் புதிய சமுதாயக் கிணறுகள்
பா்கூா் மலைக் கிராமங்களில் புதிதாக சமுதாயக் கிணறுகள் அமைக்கும் திட்டம் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.
அலுவலா்களுக்கு அறிவுறுத்தல்
ஈரோடு மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்கின்ற வகையில் அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விரைவாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்றோா்
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா, திருப்பூா் எம்பி கே.சுப்பராயன், அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாச்சலம், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ரெ.சதீஷ், மாநகராட்சி ஆணையா் என்.மணீஷ், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், மாவட்ட வன அலுவலா் கு.வெ.அப்பால நாயுடு, செயற்பொறியாளா் (ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை) சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.