மதுவால் கல்லீரல் பாதிப்பு, மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை
சேலதில், கல்லீரல் நோய்கள், அதன் அறிகுறிகள், குறித்து விரிவாக மருத்துவர்கள் தெரிவித்தனர்;

மதுவால் கல்லீரல் பாதிப்பு – மருத்துவ பயிலரங்கில் முக்கிய தகவல்கள்
சேலம்: சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உயிர்வேதியியல் துறை சார்பில், கல்லீரல் நோய்கள் குறித்து மருத்துவ பயிலரங்கம் மற்றும் கண்காட்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியை டீன் தேவிமீனாள் தொடங்கி வைத்தார். இதில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் மருத்துவ நிபுணர்கள் பலர் கலந்துகொண்டு முக்கிய உரையாற்றினர்.
பயிலரங்கில், கல்லீரல் நோய்கள், அதன் அறிகுறிகள், சிகிச்சை முறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. மது அருந்துவது கல்லீரலை கடுமையாக பாதிக்கக்கூடிய முக்கிய காரணங்களில் ஒன்றாகும். அதேசமயம், உடல் பருமனானவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் கல்லீரலில் அதிக கொழுப்பு சேர்ந்து பாதிக்கப்படுவர். மேலும், கர்ப்ப காலத்திலும் சில பெண்களுக்கு கல்லீரல் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பயிலரங்கில் கல்லீரல் செயல்பாடுகள் குறித்த கண்காட்சி ஏற்பாடுசெய்யப்பட்டு, பொதுமக்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். இதில், துறைத்தலைவர் ரங்கராஜன், இணை பேராசிரியர் ராஜலட்சுமி, மருத்துவ கண்காணிப்பாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.