ஏலச்சீட்டு நடத்தி ரூ.10 கோடி மோசடி: பொதுமக்கள் சாலை மறியல்
ஏலச்சீட்டு நடத்தி பல கோடி மோசடி செய்த பணத்தை திருப்பி தரக்கோரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பவானி மெயின் ரோட்டில் மறியல்.;
ஈரோடு சூளை சி.எஸ். நகரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஈரோடு கங்காபுரத்தில் சோப்பு தயாரிக்கும் நிறுவனம் உள்பட சிறு சிறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவர் ஈரோடு அசோகபுரம் மெயின் ரோட்டில் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி வருகிறார். தினசரி வசூல், வார வசூல், மாத வசூல் என்ற பெயரில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 10 லட்சம் வரை ஏலச்சீட்டு நடத்தி வந்தார். 250-க்கும் மேற்பட்ட மக்கள் இவர் நடத்தி வந்த ஏலச்சீட்டில் பணம் செலுத்தி வந்தனர். இதில் பெரும்பாலும் கூலி தொழிலாளர் தான் அதிகளவில் பணம் செலுத்தி இருந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஏலச்சீட்டு குலுக்களில் பணம் எடுத்தவர்களுக்கு உரிய பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென ஏலச் சீட்டு நிறுவனம் மூடப்பட்டு இருந்தது. இதனால் பணம் கொடுத்தவர்கள் பதற்றம் அடைந்து ஊழியர்களை போனில் தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது தொழிலதிபர் நடத்தி வந்த தொழில்கள் அனைத்தும் நஷ்டம் அடைந்து விட்டதால் அவர் தலைமறைவாகி விட்டதாகவும் அவர் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து எஸ்பி அலுவலகத்தில் திரண்டு வந்து புகார் அளித்தனர். அதில் எங்களிடம் இருந்து ரூ 10 கோடி வரை தொழிலதிபர் மோசடி செய்துவிட்டதாக புகார் அளித்திருந்தனர். இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை அந்த ஏலச்சீட்டு நிறுவனத்திற்கு சொந்தமான கிளை அலுவலகம் பவானி மெயின் ரோட்டில் உள்ளது. அங்கு ஊழியர்கள் பொருட்களை ஒரு வாகனங்களில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் அந்த அலுவலகம் முன்பு திரண்டனர். அவர்கள் எங்க பணத்தை திருப்பித் தரவேண்டும் என்று ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் பவானி மெயின் ரோட்டில் சாலையில் அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். உங்கள் புகார் குறித்து போலீசாரிடம் தெரிவியுங்கள். போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறினர். இதை ஏற்று சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்த்து பாதிப்பு ஏற்பட்டது.