பர்கூர் மலைப் பாதையில் விழுந்த ராட்சத பாறை: 2வது நாளாக போக்குவரத்து பாதிப்பு
தமிழகம், கர்நாடகா மாநிலங்களுக்கு இடையிலான வாகன போக்குவரத்து இன்று 2-வது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வழியாக பர்கூர் மலைப்பாதையில் கர்நாடக மாநிலம் கொள்ளேகால் மைசூர் செல்லும் பாதையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் கடந்த இரு வாரங்களாக பர்கூர் மலைப் பாதையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பாதையில் பல்வேறு இடங்களில் பாறைகள் விழுந்து மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மண்சரிவு அகற்றப்பட்டு போக்குவரத்தை சீர் செய்யப்பட்டது. இந்நிலையில் பர்கூர் மலைப் பாதையில் தாமரைக்கரை அருகே செட்டிநொடி நெய்கரை பகுதியில் திங்கட்கிழமை மாலை ராட்சத பாறைகளுடன் மண்சரிவு ஏற்பட்டது. சாலையின் நடுவே பாறைகள் கிடைப்பதால் வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுறமும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் கர்நாடக மாநிலங்களுக்கு இடையிலான வாகன போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
மலைப்பகுதியில் பல்வேறு பணிக்காக சென்ற பொதுமக்கள் வீடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். இது குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் வனத்துறையினர் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு ஜேசிபி எந்திரம் மூலம் பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன. பணிகளை அந்தியூர் சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடாஜலபதி கோட்டாட்சியர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர்.
ஆனால் சாலையின் நடுவே கிடைக்கும் மிகப்பெரிய அளவிலான பாறைகளை அகற்றுவதில் சிரமம் நீடித்து வருகிறது. இதனால் 2-வது நாளாக செவ்வாய்க்கிழமையும் வாகனப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மலைப்பாதையில் அடிக்கடி மண் சரிந்து விழுந்து போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருவது பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.