ஈரோடு மாவட்ட முன்னாள் ஆட்சியர் கதிரவன் திடீர் மரணம்
ஈரோடு மாவட்ட முன்னாள் ஆட்சியரும், தமிழக சாலை மேம்பாட்டு திட்ட இயக்குனருமான கதிரவன் இன்று நடைபயிற்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் கதிரவன். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் முதுகலை வேளாண்மை பட்டதாரி. இவர் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று 2002-ம் ஆண்டு பயிற்சி துணை மாவட்ட ஆட்சியராக தருமபுரி மாவட்டத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர் கள்ளக்குறிச்சி, அறந்தாங்கி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியராக (ஆர்.டி.ஓ.) பணியாற்றினார்.
சுனாமியின்போது சிறப்பு துணை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி பாதிக்கப்பட்டவர்கள் நலத்திட்டங்கள் பெற உதவினார். பின்னர் 2007-ம் ஆண்டு மாவட்ட வருவாய் அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற இவர் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பணியாற்றினார். சேலம் மாவட்ட ஆவின் பொதுமேலாளராகவும் இருந்தார். 2013-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து பெற்ற இவர் வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனராக இருந்தார்.
பின்னர் மதுரை மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார். 2016-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஆட்சியராக பதவி ஏற்றார். அங்கிருந்து ஈரோடு மாவட்டத்தின் 33-வது மாவட்ட ஆட்சியராக கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார். இதனையடுத்து ஈரோடு மாவட்டத்தில் ஆட்சியராக இருந்தபோது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், இன்று காலை சென்னையில் நடை பயிற்சியின் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். சேலம் டேன்மேக் மேலாண் இயக்குநராக இருந்த கதிரவனுக்கு அண்மையில் தான் நெடுஞ்சாலைத்துறையில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவரதுது மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் கதிரவன். ஐ.ஏ.எஸ் அவர்கள் உடல் நலக்குறைவின் காரணமாக மறைவெய்திய செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.