ஈரோடு நெடுஞ்சாலையில் பரபரப்பு: கரும்பை தேடி லாரிகளை வழிமறித்த யானை
சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதியில் நெடுஞ்சாலையில் வந்த லாரிகளை வழிமறித்து கரும்பை தேடிய யானையால் பரபரப்பு.;
ஈரோடு : சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதியில் நெடுஞ்சாலையில் வந்த லாரிகளை வழிமறித்து கரும்பை தேடிய யானையால் பரபரப்பு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
புலிகள் காப்பக வனப்பகுதியில் யானைகள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழ்நாடு - கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
கரும்பு பாரம் ஏற்றிய லாரிகள்
தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மலைக் கிராமங்களில் விளையும் கரும்புகள் வெட்டி லாரிகளில் பாரம் ஏற்றி சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சர்க்கரை ஆலைக்கும், வெல்லம் மற்றும் கரும்பு சர்க்கரை தயாரிக்கும் ஆலைக்கும், கரும்பு சாறு விற்பனை செய்யும் கடைகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.
யானைகளால் லாரிகள் வழிமறிப்பு
அவ்வாறு கொண்டு செல்லும்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் கரும்பு பாரம் ஏற்றிய லாரிகளை வழிமறித்து கரும்பு துண்டுகளை பறித்து தின்றது வாடிக்கையாக உள்ளது.இதைத் தடுக்க கரும்பு பாரம் ஏற்றிய லாரிகள் பாரத்தின் மீது தார்ப்பாய் போர்த்திக் கொண்டு வரப்படுகிறது.
காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே லாரி வழிமறிப்பு
இந்நிலையில் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே சாலை நடுவே நடமாடியபடி சரக்கு லாரிகளை வழிமறித்து கரும்பு உள்ளதா என் தும்பிக்கையால் தேடிப் பார்த்தது.