ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : கர்நாடகா பெண் வேட்பு மனு ஏற்கப்பட்ட சர்ச்சையால், பட்டியல் வெளியிட தாமதம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கர்நாடகா பெண் வேட்பு மனு ஏற்கப்பட்ட சர்ச்சையால், சின்னத்துடன் வேட்-பாளர் பட்டியல் வெளியிட தாமதம் ஏற்பட்டது.;
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், 58 வேட்பாளர்கள், 65 மனு தாக்கல் செய்தனர். பரிசீலனையில் மூன்று பேர் மனு தள்ளுபடியானது. வாபஸ் பெறுதல் நேற்று நடந்தது. இதில் எட்டு பேர் மனுவை வாபஸ் பெற்றதால், 47 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
சின்னம் ஒதுக்கீடு
சின்னம் ஒதுக்கும் பணி தொடங்கியது. தி.மு.க.,வுக்கு உதயசூரியன், நாம் தமிழர் கட்சி சீதாலட்சுமிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கர்நாடகா வேட்பாளர் சர்ச்சை
கர்நாடகா மாநிலம் பெங்களூரு, கே.ஆர்.புரம் சட்டசபை தொகுதியை சேர்ந்த வி.பத்மாவதி, சுயேட்சையாக வேட்பு மனுத்தாக்கல் செய்து, மனு ஏற்கப்பட்டு, சின்னம் ஒதுக்கீடு பற்றி அறிவித்தனர். தேர்தல் ஆணைய விதிப்படி, லோக்சபா, ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு எந்த மாநிலத்தில் இருந்தும், எந்த மாநிலத்துக்கும் வேட்பாளராக போட்டியிடலாம். ஆனால், சட்டசபை தொகுதிக்கு, அம்மாநிலத்தில் வாக்காளராக உள்ளவர்கள் மட்டுமே போட்டியிட முடியும். இதைக்கூறி சுயேட்சை வேட்பாளர்கள் அக்னி ஆழ்வார், நுார் முகம்மது, பத்மராஜன் போன்றோர் பத்மாவதி மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
வேட்பாளர் பட்டியல் தாமதம்
இதுபற்றி தேர்தல் நடத்தும் அதிகாரி மணீஷ், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி கலெக்டர் ராஜகோபால் சுன்கரா போன்றோர், தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்டவர்களிடம் பேசி, இறுதி செய்ய முயன்றனர். இதனால் வேட்பாளர் பட்டியல் வெளியிட தாமதம் ஆனது.
வேட்பாளர் பெயர்கள் பட்டியல்
ஒருவழியாக இரவு, 9:30 மணியை கடந்து, தேர்தல் ஆணைய இணையதளத்தில் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னம் குறிப்பிடாமல் வெளியிடப்பட்டது.
வேட்பாளர்களின் விபரம்: தி.மு.க., வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சீதாலட்சுமி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களாக எம்.பஞ்சாச்சரம், வி.எஸ்.ஆனந்த், ஆர்.சுப்பிரமணியன்,
எம்.ஆர்.செங்குட்டுவன், எம்.சாமிநாதன், பி.ஏ.சவிக்தா, எஸ்.முத்தையா, என்.தனஞ்செயன், ஆர்.சத்யா, எஸ்.லோகேஷ்சேகர், கே.ஏ.சங்கர்குமார், என்.பாண்டியன், சி.ரவி, அமுதராசு, சி.பரமேஸ்வரன், என்.ராமசாமி, எம்.வி.கார்த்தி, டி.எஸ்.செல்லகுமாரசாமி, வி.சவுந்தர்யா, எஸ்.மதுமிதா, எம்.ஆறுமுகம், வி.பத்மாவதி, ப.பவுல்ராஜ்.எஸ்.வெண்ணிலா, கே.பரமசிவம், ஆர்.திருமலை, அக்னி ஆழ்வார், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கே.முனியப்பன், கே.கலையரசன், பி.செல்லபாண்டியன், டீ.பிரபாகரன், எம்.கந்தசாமி, கே.முருகன், எஸ்.தர்மலிங்கம், சி.ராஜமாணிக்கம்,
ஆர்.லோகநாதன், பி.இசக்கிமுத்துநாடார், ஹமீது ஹைபர், எஸ்.ஆனந்த், ஜெ.கோபாலகிருஷ்ணன், ஆர்.ராஜசேகரன், ஏ.நுார்முகம்மது, கே.மதுரவிநாயகம், கே.பத்மராஜன், என, 47 வேட்பாளர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது.