அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை குறிவைக்கும் சைபர் குற்றவாளிகள்

ஈரோடு மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை குறிவைத்துள்ள சைபர் குற்றவாளிகளால் பணியாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Update: 2023-08-20 04:39 GMT

சைபர் கிரைம் - காட்சி படம் 

சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. வங்கியில் இருந்து பேசுகிறேன், ஒரு முறை பயன்படுத்தும் ஓ.டி.பி. சொல்லுங்கள் என்று தொடங்கிய மோசடி, சமூக இணையங்களான முகநூல், இன்ஸ்டாகிராம் வழியாகவும் நடந்தது.

போலி முகநூல் கணக்குகள் மூலம் நடைபெறும் மோசடிகள் குறித்து சற்று விழிப்புணர்வு ஏற்பட்டதும், ஜிபே உள்ளிட்ட பணப்பரிமாற்ற செயலிகள் மூலம் மோசடிகள் நடந்தன. பொருட்கள் விற்பனை செய்யும் செயலிகள் மூலம் அன்றாடம் யாரையாவது ஏமாற்றுவது தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

ஒரு குற்றத்தை கண்டறிந்து அதுபற்றி மக்கள் விழிப்புணர்வு அடையும் நேரத்தில் இன்னொரு வழியில் மோசடியாளர்கள் தங்கள் கைவரிசையை காட்ட தொடங்குகிறார்கள். இந்நிலையில் புதுவிதமாக வாட்ஸ்-அப் மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை குறிவைத்து ஒரு கும்பல் புது வகை மோசடியில் இறங்கி உள்ளது.

இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக பெண் பணியாளர்கள் மிகுந்த கலக்கம் மற்றும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் அனைத்து ஆசிரியர்கள், அரசு பணியாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை பதிவினை அனுப்பி உள்ளனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது

ஈரோடு மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை குறிவைத்து சைபர் குற்றவாளிகள் மோசடி செய்து வருகிறார்கள். குறிப்பிட்ட குற்றவாளிகள் தமிழக அரசின் சின்னத்தை தங்கள் வாட்ஸ்-அப் எண் முகப்பு படமாக வைத்து உள்ளனர். முதலில் ஒரு அரசு ஊழியர் அல்லது ஆசிரியரை வாட்ஸ்-அப் குரல் அழைப்பில் தொடர்பு கொள்கிறார்கள்.

அவர்களிடம் எந்த துறையில் பணியாற்றுகிறார்கள் என்பதை கேட்டு தெரிந்து கொண்டு, அந்த துறையின் உயர் அதிகாரிகள் அல்லது ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரி என்று பேசுகிறார்கள். மேலும், சம்பந்தப்பட்டவர் குற்றம் செய்து விட்டதாக கூறி மிரட்டுகிறார்கள்.

உயர் அதிகாரி அல்லது லஞ்ச ஒழிப்பு அதிகாரி என்று கூறியதும், எதிர் முனையில் இருப்பவர்கள் என்ன சொல்வது என்று தெரியாமல் பதற்றத்தில் பேசுவதை சாதகமாக பயன்படுத்தி முழுமையாக தகவல்களை சேகரிக்கிறார்கள்.

பெண் பணியாளர்களாக இருந்தால் அவர்களின் தனிப்பட்ட எண்ணுக்கு தொடர்புகொண்டு ஆபாசமாக பேசியும், மிரட்டியும் பணம் பறிக்கும் குற்ற நிகழ்வுகள் நடந்து வருகின்றன.

எனவே இதுபோன்ற அழைப்புகள் வரும்போது யாரும் அச்சப்பட வேண்டாம். எந்த விவரங்களும் கூற வேண்டாம். மிரட்டுவதாக யாரேனும் வாட்ஸ்-அப் அல்லது வேறு செயலிகள் வழியாக பேசினால் உடனடியாக அரசு ஊழியர்கள் சங்கத்தை தொடர்பு கொள்ளுங்கள் என்று அந்த எச்சரிக்கை பதிவில் கூறப்பட்டு உள்ளது.

சமீபத்தில் ஈரோட்டில் உள்ள பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவருக்கு வாட்ஸ்-அப் அழைப்பில் வந்த நபர் ஒருவர் மிரட்டல் தொனியில் பேசியதுடன், ஆசிரியைகளின் தனிப்பட்ட செல்போன் எண்ணையும் விசாரணைக்காக என்று வாங்கி உள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் இதுபோன்ற மோசடியில் பலரும் பணத்தை இழந்து உள்ளதாகவும் தெரிகிறது. இந்த மோசடி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News