அண்ணாமலை கைது: பா.ஜ., சார்பில் மாநிலம் முழுவதும் அதிரடி ஆர்ப்பாட்டம்

பா.ஜ., முன்னணி தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், அண்ணாமலை கைதுக்கு கண்டனம்;

Update: 2025-03-18 06:00 GMT

அண்ணாமலை கைதை கண்டித்து பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் ஊழலை கண்டித்து, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் முன்னணி தலைவர்கள் நேற்று போராட முயன்றனர். அவர்களை கைது செய்ததை கண்டித்து, பல்வேறு இடங்களில் பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், சூரம்பட்டியில் முன்னாள் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 60 ஆண்கள், 16 பெண்கள் பங்கேற்றனர். வில்லரசம்பட்டி நால்ரோட்டில் முன்னாள் மாவட்ட பொது செயலாளர் சிவகாமி தலைமையில் 48 பேரும், மொடக்குறிச்சியில் முன்னாள் மாவட்ட துணை தலைவர் பால சுப்பிரமணியம் தலைமையில் 54 பேரும், சிவகிரியில் மாநில பொது குழு உறுப்பினர் முருகானந்தம் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெருந்துறை நகர பா.ஜ., சார்பாக, பெருந்துறை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள டாஸ்மாக் கடை முன், முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் இமயம் சந்திரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டி.என்.பாளையத்தை அடுத்த டி.ஜி.புதூர் நால்ரோடு பகுதியில், டி.என்.பாளையம் பா.ஜ., மேற்கு ஒன்றிய தலைவர் சுதாகர் தலைமையிலும், டி.என்.பாளையம் அண்ணாதுரை சிலை பஸ் நிறுத்தத்தில், கிழக்கு ஒன்றிய தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையிலும் போராட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

கோபி பஸ் ஸ்டாண்ட் முன், பா.ஜ., நகர தலைவர் மகேஸ்வரன் தலைமையிலும், வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையிலும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 43 பேர் கலந்து கொண்டனர். கவுந்தப்பாடி நால்ரோட்டிலும் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பவானி அந்தியூர் பிரிவில், மாநில பொதுக்குழு உறுப்பினர் சித்தி விநாயகம் தலைமையில் 32 பேரும், அம்மாபேட்டையில் கிழக்கு ஒன்றிய தலைவர் மகாலிங்கம் தலைமையிலும், மேட்டூர்-பவானி ரோட்டில் அம்மாபேட்டை அந்தியூர் பிரிவிலும், பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில், தெற்கு மாவட்ட தலைவர் மோகனப்பிரியா சரவணன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News