சத்தியமங்கலம் அருகே விவசாய தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் கரும்பு, வாழை தோட்டத்திற்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்துள்ளது.;
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஜீரஹள்ளி வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் தாளவாடி அடுத்த கெட்டவாடியைச் சேர்ந்தவர் இளங்கோ(42) இவர் தனது 3 ஏக்கர் விவசாய தோட்டத்தில் கரும்பு ,வாழை பயிர் சாகுபடி செய்துள்ளார். இன்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வந்த 8 காட்டு யானைகள் தோட்டத்துக்குள் புகுந்து கரும்பு, வாழை பயிரை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு எழுந்து பார்த்த விவசாயி இளங்கோ, யானைகள் பயிர்களை சேதாரபடுத்துவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி பக்கத்து தோட்டத்து விவசாயிகளுக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த விவசாயிகள் சப்தம் போட்டும் பட்டாசு வெடித்தும் யானைகளை துரத்த முயற்சித்தனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பின் யானைகள் காட்டுக்குள் விரட்டியடிக்கப்பட்டன.
1 ஏக்கர் பரப்பளவு உள்ள கரும்பு, 500 வாழைகள், 50 தென்னை மரங்கள் என இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பயிர்களை யானைகள் சேதப்படுத்தியது. இதுபோல் அடிக்கடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். யானைகளால் சேதமடைந்த விவசாய பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வனப்பகுதியை சுற்றி அகளி அமைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.