சத்தியமங்கலம் அருகே சரக்கு வாகனம் விபத்து: காயங்களுடன் டிரைவர் மீட்பு
சத்தியமங்கலம் அருகே, கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்திற்குள்ளான சரக்கு வாகனத்தில் சிக்கித்தவித்த ஓட்டுநரை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். இவர் அவிநாசியில் இருந்து எலக்ட்ரானிக் பொருட்களான ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் ஆகியவற்றை தனது மினி வேனில் ஏற்றிக்கொண்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் எலக்ட்ரானிக் விற்பனை நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
சத்தியமங்கலம் அருகே உள்ள மாரனூர் பகுதியில் அவரது வாகனம் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராவிதமாக ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து அருகே உள்ள மரத்தில் மோதி வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தை ஓட்டி வந்த உதயகுமார், அதனுள் சிக்கி தவித்து அலறியுள்ளார்.
இதை கண்ட அவ்வழியாக இருசக்கர வாகன ஓட்டி ஒருவர், உடனடியாக இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் வேனில் சிக்கித்தவித்த ஓட்டுனர் உதயகுமாரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மேலும், சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.