சத்தியமங்கலம்: ரேஷன் கடையில் குவிந்த மக்கள்… தொற்று பரவும் அபாயம் ….
சத்தியமங்கலத்தில் சமூக இடைவெளியை மறந்து கொரோனா நிவாரண தொகையை வாங்க ரேஷன் கடையில் குவிந்த மக்களால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தளர்வில்லா முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பதவியேற்றவுடன் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண தொகையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்ததையடுத்து முன் தொகையாக 2000 ரூபாய் ரேஷன் கடையில் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்திருந்தார்.
அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கொமராபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ரேஷன் கடையில் இன்று காலை முதல் பொதுமக்கள் நிவாரண தொகையை வாங்க சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக குவிந்ததால் நோய்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு நோய்த்தொற்று பரவாமல் பொதுமக்களை காக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.