டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு
சத்தியமங்கலம் அருகே புதிதாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகைப் போராட்டம் செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள விண்ணப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட வாலிபாளையம் கிராமத்தில், இன்று காலை புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட உள்ளதாக வந்த தகவலையடுத்து, அதனை தடுத்து நிறுத்த வாலிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர்.
புதிதாக திறக்கப்பட உள்ள கடைக்கு அருகாமையில் ரேசன் கடை, ஆர்.சி.துவக்கப்பள்ளி, கிறிஸ்தவ வழிபாட்டுத்தலம், ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பல இடங்களுக்கு பொதுமக்கள் இந்த வழியை தான் பயன்படுத்தி வருகிறார்கள். பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் இந்த வழியை தான் பயன்படுத்துகிறார்கள். ஆகவே இந்த இடத்தில் புதிய டாஸ்மாக் கடையை திறக்க அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி, ஏராளமான பெண்கள் கடை முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தின் காரணமாக இன்று டாஸ்மாக் கடை திறக்கப்பட மாட்டாது என போலீசார் அறிவித்ததால், இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.