சத்தி அருகே அரசுப் பேருந்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானை

சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை அரசுப் பேருந்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு.

Update: 2021-09-13 11:30 GMT

பேருந்தின் முன்பக்க கண்ணாடியை தடவி பார்க்கும் காட்டு யானை.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு விலங்குகள் உள்ளன. இதில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, செந்நாய், கழுதைப்புலி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்தில் உள்ள சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரி ஓட்டுனர்கள், கரும்புகளை யானைகள் உண்பதற்காக வனப் பகுதியில் வீசிவிட்டு செல்கின்றனர். கரும்புகளை சுவைத்து பழக்கப்பட்ட யானைகள் மீண்டும் அதே இடத்தில் கரும்பு கிடைக்கும் என ரோட்டோரமாக வந்து நிற்கின்றன. இதன் காரணமாக அவ்வழியாக செல்லும் வாகனங்களை வழிமறிப்பது தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில் இன்று சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் அரசுப் பேருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்து. அப்போது திடீரென தேசிய நெடுஞ்சாலைக்கு வந்த ஒற்றை காட்டு யானை பேருந்ததை வழி மறித்து நின்றது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் பதற்றமடைந்தனர். சிறிது நேரம் பேருந்து முன்பு நின்றிருந்த யானை பேருந்தின் முன்பகுதி கண்ணாடி முன்பு வந்து தடவிப் பார்த்தது. பின்பு இடது புறத்தில் உள்ள ஜன்னல் வழியாக தும்பிக்கையை உள்ளே நுழைக்க முயற்சித்தது. உஷாரடைந்த பேருந்து ஓட்டுனர் உடனடியாக சாமர்த்தியமாக பேருந்தை மெதுவாக நகர்த்தி கிளம்பியதால், பயணிகள் நிம்மதி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், யானைகள் உண்பதற்கு ஏற்றவாறு மூங்கில் காடுகள் மரங்கள் நிறைய ஆசனூர் காட்டு வனப்பகுதியில் உள்ளன. யானைகளுக்கு கரும்புகளை வீசி பழக்கப்படுத்த வேண்டாம். இது மற்ற வாகனங்களுக்கு யானைகளால் ஆபத்து ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News