பவானிசாகரில் 7வது நாளாக தொடரும் மீனவர் ‘ஸ்டிரைக்’
erode district news- பழைய கூலி வழங்க வலியுறுத்தி, பவானிசாகர் அணைப்பகுதி மீனவர்கள், 7வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
erode district news- ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் மூலம் மீன் குஞ்சுகள் விடப்பட்டு மீன் பிடிக்கும் உரிமம் தனியாருக்கு தரப்பட்டிருந்தது. இங்கு சுசில் குட்டை, அண்ணாநகர், வெற்றிவேல் முருகன் நகர், கண்ட்ராயன் மொக்கை போன்ற பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பரிசல் மூலம் மீன்களைப் பிடித்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 2000 கிலோ மீன்கள் பிடித்து வந்தனர்.
இந்த மீன்கள் கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. தனியார் மீன்பிடி உரிமம் முடிந்த நிலையில் கடந்த 15-ந் தேதி முதல் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகமே நேரடியாக மீன்களை கொள்முதல் செய்தது. தனியார் குத்தகைதாரர் ஒரு கிலோ மீனுக்கு 55 ரூபாய் கூலியாக மீனவர்களுக்கு தந்த நிலையில் மீன் வளர்ச்சி கழகம் ஒரு கிலோ 35 ரூபாய் மட்டுமே வழங்குகிறது. இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பழையபடி தங்களுக்கு 55 ரூபாய் கூலியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 15-ந் தேதி முதல் பவானிசாகர் அணைப்பகுதியில் மீனவர்கள் மீன் பிடிப்பதை நிறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று 7-வது நாளாக நீடித்து வருகிறது.