குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஒற்றை யானை
பவானிசாகர் அணை பூங்கா அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. தற்போது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் தாங்காமல் தண்ணீர் தேடி வன விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி, அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுவது வாடிக்கையாகி வருகின்றன.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று பவானிசாகர் அணை பூங்காவின் அருகே உள்ள புங்கார் கிராம குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதைக்கண்ட அப்பகுதி பொது மக்கள் டார்ச் லைட் அடித்தும் சத்தங்கள் எழுப்பியும் யானையை விரட்டினர். இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானையால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது கோடை காலம் நெருங்கி வரும் வேளையில் வனப்பகுதிக்குள் உள்ள குட்டைகளில் தண்ணீர் நிரப்பினால் யானைகள் வெளியே வருவதை தடுக்கலாம் என வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.