கோவிலுக்கு செல்ல அனுமதி மறுப்பு: அரசு பஸ்ஸை சிறை பிடித்த மலை கிராம மக்கள்
தலமலை வனப்பகுதியில் கோவிலில் மழை வேண்டி சிறப்பு பூஜை செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் மலை கிராம மக்கள் அரசு பஸ்ஸை சிறைப்பிடித்து போராட்டம்.;
சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தொட்டபுரம் கிராம மக்கள் தலமலை அருகே உள்ள உடும்பன் கோவிலுக்கு சென்று மழை வேண்டி சிறப்பு பூஜை செய்து தரிசனம் செய்ய புறப்பட்டுச் சென்றனர். சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் மலைப்பகுதிகளில் சென்று கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த தலமலை வனத்துறையினர் பொதுமக்களை தடுத்து நிறுத்தியுள்ளார். மேலும் கோவிலில் கூட்டமாக சென்று சிறப்பு பூஜைகள் செய்ய அனுமதியில்லை எனக்கூறியுள்ளார்.
இதையடுத்து கிராம மக்கள் அவ்வழியாக வந்த அரசு பேருந்தை அரைமணி நேரம் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த தலமலை வனச்சரகர் சுரேஷ் மற்றும் தாளவாடி போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், கோவில் தரிசனத்திற்கு சுழற்சிமுறையில் அனுமதி அளிப்பதாகவும் கூட்டமாகச் செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. இதனால் சமாதானம் அடைந்த கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.