கொரோனாவால் பலியானவர் உடலை அடக்கம் செய்ய முன்வராத உறவினர்கள்!

கொரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் யாரும் முன்வராத நிலையில் விடியல் இளைஞர் மன்றத்தினர் மற்றும் சுகாதாரத்துறையினர் முன்வந்து அடக்கம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-05-11 15:15 GMT

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த பசப்பன்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் கொங்க மல்லப்பா(55).இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்த நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். திங்கட்கிழமை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுவதால் தன்னுடைய வீட்டிற்கு புறப்பட்டு வந்துவிட்டார். வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருந்த நிலையில், திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து மருத்துவர்கள் அங்கு செல்வதற்கு முன்பு, அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில்,  கொரோனா பாதிக்கப்பட்டு உயிர் இழந்ததால் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் யாரும் வராததால் அவரது உடல் வீட்டிலயே கேட்பாரற்று கிடந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற விடியல் இளைஞர் மன்றத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர், உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி சென்று அடக்கம் செய்தனர். விடியல் இளைஞர் மன்றத்தினரின் செயலை பலரும் பாராட்டினர்.

Tags:    

Similar News