தமிழக - கர்நாடக எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்: பயணிகள் அவதி

தமிழக-கர்நாடக எல்லையில் தமிழக பேருந்துகள் செல்ல அனுமதி மறுத்ததால் 4 கிலோமீட்டர் வனப்பகுதியில் நடந்து சென்ற பயணிகள்.;

Update: 2021-08-27 15:30 GMT

தமிழக-கர்நாடக எல்லையில் முன்னறிவிப்பின்றி தமிழக பேருந்துகள் செல்ல அனுமதி மறுத்ததால் நான்கு கிலோமீட்டர் வனப்பகுதியில் நடந்தே சென்ற பயணிகள்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுபாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக தமிழக- கர்நாடக ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சுமார் 118 நாட்களுக்கு பிறகு போக்குவரத்திற்கு கடந்த 23ம் தேதி இரு மாநில அரசுகளும் அனுமதி அளித்தது.

அதன்படி சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி, திம்பம், ஆசனூர், புளிஞ்சூர் வழியாக கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகர், மைசூர், பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு பஸ் போக்குவரத்து துவங்கியது. அதேபோல, கேர்மளம் வழியாக கர்நாடக மாநிலத்தில் உள்ள உடையார்பாளையம், கொள்ளேகால், மைசூர் செல்லும் மற்றொரு வழியிலும் பொதுப் போக்குவரத்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று திடீரென சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் கொள்ளேகால் செல்லும் பேருந்துகள், தமிழக எல்லைப் பகுதியான கேர்மளம் சோதனைச் சாவடி அருகே நிறுத்தப்பட்டது. மேலும் கர்நாடக அரசின் சோதனைச் சாவடியில், அவ்வழியாக வரும் பயணிகளை கொரோனா நெகட்டிவ் சான்று இருந்தால் மட்டுமே, பயணிகளை கர்நாடகத்திற்குள் செல்ல அனுமதிக்கின்றனர். தமிழகத்திலிருந்து வரும் பேருந்துகளை நான்கு கிலோமீட்டர் முன்பாகவே நிறுத்தி, பயணிகளை இறக்கி விட்டுவிட்டு, திரும்பிச் சென்றுவிட வேண்டும் என எச்சரித்துள்ளனர். சோதனைச் சாவடி அருகே தமிழக வாகனங்கள் வந்தால் பறிமுதல் செய்யப்படும் எனவும் போலீசார் கூறியுள்ளனர்.

இதனால் சத்தியமங்கலத்தில் இருந்து பஸ்ஸில் செல்வோர் நான்கு கிலோ மீட்டர் முன்பாகவே பயணிகளை இறக்கி விடுகின்றனர். விலங்குகள் நடமாடும் அடர்ந்த வனப்பகுதியில் அச்சத்துடன் நான்கு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று சோதனைச் சாவடியை பொதுமக்கள் அடைகின்றனர். அங்கு கொரோனா பரிசோதனை செய்ததற்கான சான்றுகள் வைத்திருப்பவர்களை மட்டுமே அனுமதிக்கின்றனர். அதே சமயம் இரண்டு தடுப்பூசி போட்டு உள்ளோம் எங்களை அனுமதியுங்கள் என கேட்டால் விரட்டி அனுப்புவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எவ்வித முன்னறிவிப்புமின்றி பயணிகளை நான்கு கிலோ மீட்டர் தூரம் நடக்க வைத்து, பரிசோதனை சான்றுகளை காண்பித்தால் மட்டுமே கர்நாடக எல்லைக்குள் அனுமதிப்போம் என திடீரென கர்நாடக அரசு அறிவித்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும், எவ்வித பிரச்சினையும் இன்றி கர்நாடக மாநிலத்திற்கும் - தமிழகத்திற்கும் சென்று வரும் நிலையில், கேர்மளம் வழியாக கொள்ளேகால் செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது பொதுமக்களை கடும் அவதிக்கு உள்ளாக்கியுள்ளது. இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி, இதற்கு சுமூக தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

Tags:    

Similar News