பவானிசாகர் அணை மீனவர்கள் வேலை நிறுத்தம்
பவானிசாகர் அணை பகுதியில் மீன் பிடிக்கும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்;
கோப்புப்படம்
பவானிசாகர் அணையில் தனியார் சார்பில் மீன் பிடிக்கும் உரிமம் பெறப்பட்டு மீன்பிடித்து வந்த நிலையில் தற்போது கூட்டுறவு சங்கங்களுக்கு மீன் பிடிக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது. சுசில் குட்டை, அண்ணாநகர், வெற்றிவேல் முருகன் நகர், கண்ட்ராயன் மொக்கை சேர்ந்த கூட்டுறவு சொசைட்டி மீனவர்கள் சுமார் 500 பேர் பரிசல் மூலம் மீன் பிடித்து வந்தனர். இங்கு கட்லா, ரோகு கேலுத்தி, ஜிலேபி போன்ற மீன்களை அவர்கள் பிடித்து வந்தனர்.
நாள் ஒன்றுக்கு ஒரு டன் (ஆயிரம் கிலோ) மீன்களை பிடித்து கொடுத்த போது ஒரு கிலோவுக்கு மீனவர்களுக்கு ரூ.55 வழங்கப்பட்டது. ஆனால் தற்போது தனியார் டெண்டர் காலம் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் அவர்களுக்கு டெண்டர் வழங்காமல் தமிழ்நாடு மீன்வளத்துறை சார்பாக மீன்பிடிக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கூட்டுறவு சங்கங்கள் மீன்பிடிக்க உரிமை பெற்றனர். மீனவர்கள் தாங்கள் பிடித்த மீனை மீன்வளத்துறை இடம் கொடுத்த போது அவர்கள் மீனவர்களுக்கு ஒரு கிலோவுக்கு மீன் ஒரு 35-க்கு கொடுத்தனர். இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பழையபடி ஒரு கிலோ மீனுக்கு ரூ.55 வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் இதை ஏற்க மறுத்ததால் பவானிசாகர் அணை பகுதியில் மீன் பிடிக்கும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீன் பிடிக்க விரித்து வைத்திருந்த வலையை மீனவர்கள் அவிழ்த்து வீட்டிற்கு சென்று விட்டனர்.
பவானிசாகர் அணை பகுதியில் பரிசல்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக இன்று இரவு சுசில் குட்டை, அண்ணா நகர், வெற்றிவேல் முருகன் நகர், கண்ட்ராயன் மொக்கை போன்ற பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சென்னைக்கு சென்று தமிழ்நாடு மீன்வளத்துறை தலைவரை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளனர்