65 லட்சம் மதிப்பிலான குட்கா கடத்தல்: 3 பேர் கைது
ஈரோடு மாவட்டம் பண்ணாரி சோதனை சாவடியில், ரகசிய தகவல் அடிப்படையில் லாரியை மடக்கி போலீசார் சோதனை செய்தனர். அதில் இருந்த 65 லட்சம் மதிப்பிலான குட்காவை பறிமுதல்செய்து, மூன்று பேரை கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே பண்ணாரி சோதனை சாவடியில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும், செல்லும் வாகனங்களை சோதனை செய்த பின்னர் அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன்படி வெள்ளிக்கிழமை அதிகாலை கர்நாடக மாநிலத்தில் இருந்து குட்கா கடத்தப்படுவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் மோகன்ராஜ் தலைமையில் போலீசார் பண்ணாரி சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அதிகாலை 3 மணி அளவில் கர்நாடக மாநிலம், கொள்ளேகால் அருகே ஹனூரில் இருந்து பல்லடம் நோக்கி மக்காச்சோளம் லோடு ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்தது. போலீஸார் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சட்ட விரோதமாக மக்காச்சோளம் மூட்டைகளுக்கு அடிப்பகுதியில் குட்கா மூட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து குட்கா மூட்டைகள், லாரியை பறிமுதல் செய்து, கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் அருகே மார்டல்லியை சேர்ந்த டிரைவர்காந்தராஜ்(38), நீலகிரி மாவட்டம், கீழ்குந்தா பகுதியை சேர்ந்த கீளினர் ரமேஷ்(30), பல்லடத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் சுயம்புலிங்கம்(52) ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தப்பட்ட குட்காவின் மதிப்பு சுமார் ரூ. 65 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து மக்காச்சோளம் மூட்டைகளுக்கு அடிப்பகுதியில் குட்கா மறைத்து கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.