பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் அருகே ராஜன்நகர் என்ற இடத்தில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையில் புகையிலை வியாபாரியிடமிருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோயமுத்தூர் மாவட்டம் சிறுமுகையை அடுத்த பெரிய குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்ட சந்தோஷ். இவரும் இவரது தந்தை சிவராஜூம் சேர்ந்து புகையிலை வியாபாரம் செய்து வருகின்றனர். தொழில் சம்பந்தமாக கேரளா சென்று விட்டு இருவரும் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது சத்தியமங்கலம் அருகே ராஜன்நகர் என்ற இடத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக மணிகண்ட சந்தோஷ் வந்த வாகனத்தை சோதனை செய்த போது உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வரப்பட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர். அதை தொடர்ந்து பறிமுதல் செய்த பணத்தை கருவூலத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.