சாலை ஓரங்களில் எரிக்கப்படும் கழிவுகள் : விபத்துத்தை உண்டாக்கும் அபாயம்
சத்தியமங்கலம் - அத்தாணி செல்லும் வழியில் சாலையோரத்திலேயே கொட்டப்படும் குப்பைகளை தீ வைத்து எரிப்பதனால் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து அத்தாணி செல்லும் வழியில் எம்.ஜி.ஆர் நகர் என்ற பகுதியில் சாலையோரத்திலேயே வாழைக் கழிவுகள் மற்றும் குப்பைகளை வியாபாரிகள் கொட்டி வருகின்றனர். அத்துடன் இங்கு கொட்டப்படும் குப்பைகளை தீ வைத்து எரிக்கவும் செய்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இவ்வாறு வைக்கப்படும் தீயினால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதோடு எதிரே வரும் வாகனங்கள் தெரியாதவண்ணம் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தீ மளமளவென எரிவதால் சாலையோரமாக உள்ள மரங்களும் தீக்கிரையாக வாய்ப்புள்ளதாகவும் இந்த கழிவுகளை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும் உண்பதால் பல்வேறு இன்னலுக்கு ஆளாகின்றன எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிககின்றனர். இவ்விடத்தில் குப்பைகளை கொட்ட கூடாது என ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்படும் வியாபாரிகள் அதை கண்டுகொள்வதில்லை. இதனால் அப்பகுதி சுகாதார கேடாக காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை ஓரத்தில் குப்பைகளை கொட்டவும் தீ வைக்கவும் தடை விதிக்க வேண்டும் எனவும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்