ஈரோட்டில் தமிழக- கர்நாடக எல்லைபகுதியில் தமிழ் பெயர் பலகைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி தமிழகம்- கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. தமிழகம் - கர்நாடகத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் ராமபுரம் என்ற இடத்தில் தமிழில் எழுதி வைக்கப்பட்டுள்ள ஈரோடு மாவட்ட ஊராட்சி ஒன்றிய வரவேற்பு பலகை மற்றும் தேசிய நெடுஞ்சாலை பெயர் பலகை ஆகிய இரண்டும் கன்னட அமைப்பினரால் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.சாம்ராஜ்நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கன்னட சலுவாலியா கட்சி தலைவருமான வாட்டாள் நாகராஜ் தலைமையில் 40க்கும் மேற்பட்ட அவரது கட்சியினர் தமிழ்பெயர்கள் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்களை கிழித்தும், மற்றொரு பெயர்பலகையை அடித்து நொறுக்கியும் சேதப்படுத்தி கீழே தள்ளிவிட்டனர்.
இது குறித்து விசாரணை செய்த தாளவாடி போலீசார், வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் 20 பேர் மீது தமிழக அரசின் பொது சொத்தை தேதப்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்தனர். இந்த பரபரப்பு ஓய்வதற்குள் மீண்டும், தாளவாடியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில், தமிழக கர்நாடக மாநில வனப்பகுதியின் எல்லையில் உள்ள பைனாபுரம் கிராமம் அருகே எத்திக்கட்டையில் தமிழக அரசின் ஈரோடு மாவட்ட ஊராட்சி ஒன்றிய வரவேற்பு பலகையும், நெடுஞ்சாலைத் துறையின் எல்லை முடிவு பலகையும் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டிருப்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் யார் ஈடுபட்டார்கள் என்பது தெரியவில்லை எனவும், விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தாளவாடி போலீசார் தெரிவித்தனர். இரு மாநில எல்லைப்பகுதியான பைனாபுரம் கிராமம் எத்திக்கட்டை, அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதாலும், ஆள் நடமாட்டம் இல்லாததாலும், யார் இந்த பலகைகளை சேதப்படுத்தியிருப்பார்கள் என்பது மர்மமாக உள்ளது எனவும் போலீசார் தெரிவித்தனர்.