பழமையான பொருள் இரிடியம் கொடுப்பதாக கூறி மோசடி செய்த கும்பல் சிக்கியது
தொழிலதிபர் உட்பட 3 பேர் கடத்தல்
பழமை வாய்ந்த பொருட்கள் கொடுப்பதாக கூறி 5 கோடி கேட்டு சென்னை தொழிலதிபர் உட்பட 3 பேர் கடத்தல்... கோவை இந்து மகாசபை பிரமுகர் உள்ளிட்ட 9 பேர் கைது.... ரொக்கம் 9 லட்சம், 16 பவுன் தங்க நகை, மூன்று கார்கள் பறிமுதல்....
தமிழகத்தில் பல்வேறு நபர்களிடம் விலையுயர்ந்த இரிடியம் இருப்பதாகவும் அதனை விற்பனை செய்வதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்து பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த பழமை வாய்ந்த பொருட்களை வாங்கும் தொழிலதிபர் மோகன் என்பவரிடம் சத்தியமங்கலத்தில் பழமை வாய்ந்த பொருட்கள் இருப்பதாகக் கூறி சத்தியமங்கலத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் மற்றும் கோவை இந்து மகா சபை பிரமுகர் பிரேம் ஆகியோர் அழைத்துள்ளனர். இதனையடுத்து பண்ணாரி கோவிலுக்கு சென்னை கீழ்பாக்கம் தொழிலதிபர் மோகன் அவரது நண்பர் ரகுமான் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் வந்துள்ளனர். அப்போது அங்கு திடீரென மூன்று கார்களில் வந்த மர்ம கும்பல் அடையாள அட்டைகளை காண்பித்து நாங்கள் காவல்துறையினர் என்றும் நீங்கள் சட்ட விரோதமான செயலில் ஈடுபடுவதற்காக இங்கு வந்துள்ளீர்கள் என்றும் உங்களை கைது செய்து விடுவோம் என மிரட்டி கார்களில் ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் அருகே உள்ள ராஜன் நகர் கிராமத்தில் அன்பு என்பவரது தோட்டத்தில் அடைத்து வைத்துள்ளனர். பிறகு 5 கோடி ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் உங்களை கைது செய்து பல்வேறு வழக்குகளில் சிறைக்கு அனுப்பி விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன மோகன் சென்னையில் உள்ள தனது மனைவிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு போலீசார் வேடத்தில் வந்த மர்ம கும்பலிடம் மாட்டிக் கொண்டதாக கூறியுள்ளார். கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் அவரது மனைவி வித்யாவிடம் 5 கோடி தரவில்லை எற்றால் உங்கள் கணவரை கொன்று விடுவதாக மிரட்டி உள்ளனர்.
இதனால் பயந்து போன மோகனின் மனைவி வித்யா மூன்று தவணைகளாக 21 லட்சம் ரூபாயை மோசடி கும்பலில் ஒருவரான தர்மபுரியை சேர்ந்த ரமேஷ் என்பவர் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். அதன்பிறகு மோகனின் மனைவி வித்யா சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் தனிப்படை போலீசார் கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடித்து, சுற்றிவளைத்தனர். அப்போது இவர்களை கடத்தி வைத்திருந்த போலீஸ் ரஞ்சித் (எ) ரஞ்சித்குமார், கோவை இந்து மகா சபை பிரமுகர் பிரேம், தர்மபுரி ரமேஷ், எரங்காட்டூர் ஜீவானந்தம், சபாபதி உள்ளிட்ட ஒன்பது நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 சொகுசு கார்கள், வங்கியில் இருந்து எடுத்து வைத்திருந்த ஒன்பது லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் இருடியம் தயாரிப்பதற்காக மூன்று பெட்டிகளில் வைத்திருந்த மூலப்பொருட்கள், பல்வேறு நபர்களிடம் ஏமாற்றுவதற்காக இவர்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த உபகரணங்கள், கெமிக்கல் பாட்டில்கள், நவீன ஹெல்மெட், நவீன கேஸ் சிலிண்டர் உள்ளிட்டவைகளை கைப்பற்றி காவல்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். கடத்தப்பட்ட மூன்று நபர்களையும் மீட்டு சத்தியமங்கலம் அழைத்து வந்தனர். 9 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் மேலும் இவர்களது கூட்டாளிகள் 6 பேர் தப்பித்து சென்று விட்டதாகவும், மொத்தம் இந்த கடத்தல் சம்பவத்தில் 15 பேர் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இவர்கள் தமிழகத்தில் பல்வேறு நபர்களிடம் விலையுயர்ந்த இரிடியம் இருப்பதாகவும் அதனை விற்பனை செய்வதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்து பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. கடத்தல் சம்பவம், மீட்கப்பட்ட பணம், கார் ஆகியவற்றின் காரணமாக சத்தியமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.