சித்தோடு அருகே கால்டாக்ஸியில் மதுபாட்டில்கள் கடத்தல் - ஒருவர் கைது
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே பிரபல கால்டாக்ஸி நிறுவன வாகனத்தில், மதுபானங்களை கடத்தி வந்த நபரை, சித்தோடு போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்துள்ள லட்சுமி நகர் சோதனைச்சாவடியில் போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு கால்டாக்ஸி காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் காரின் சீட்டுகளுக்கு இடையே மதுபானங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கால்டாக்ஸி ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரித்ததில், ஈரோடு வெட்டுகாட்டு வலசுபகுதியைச் சேர்ந்த விஜய்சூர்யா (24), என்பதும் பிரபல கால்டாக்ஸி நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு கார் ஓட்டி வருவதும் தெரியவந்தது.
மேலும் ஊரடங்கு காரணமாக ஈரோட்டில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் வெளிமாவட்டத்தில் இருந்து மதுபானங்களை வாங்கி வந்து இங்கு அதிக விலைக்கு விற்பதற்காகவும், தனது வாகனத்தில் மதுபாட்டில்களை கடத்தி வந்ததையும் ஒப்புக்கொண்டனர். அவரிடம் இருந்து, 96 மது பாட்டில்கள் மற்றும் கால்டாக்ஸி காரை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுநர் விஜய்சூர்யா மீது வழக்குப்பதிந்து, கைது செய்து பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.