ஆடி பிறப்பு : பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் புனித நீராடத்தடை
கொரோனா காரணமாக, ஆடி பிறப்பு நாளான இன்று, பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சிறந்த பரிகாரத் தலங்களில் பவானி கூடுதுறையும் ஒன்று. பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான பவானியை, 'திரிவேணி சங்கமம்' என்று அழைக்கப்படுகிறது. பவானி கூடுதுறையில், பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
இங்கு ஆண்டுதோறும் ஆடி 1ஆம் தேதி, காவிரி ஆற்றில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி செல்வார்கள். மேலும் புதுமணத் தம்பதியர் அருகம்புல் வைத்து நீராடுவதோடு, தங்களின் திருமண மாலைகளை பூஜித்து காவிரியில் விட்டுச் செல்வார்கள். ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்வார்கள். குறிப்பாக ஆடி மாதத்தில் பவானி சங்கமேஸ்வர் கோவிலில் வழக்கத்தை விட அதிக மக்கள் கூடுவார்கள்.
தற்போது தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய 144 தடை உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது. இதன் காரணமாக ஆடி பிறப்பான இன்று, பவானி கூடுதுறையில், காவிரியில் புனித நீராடுதல் போன்ற நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடித்து, கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.