ஆடுகள் மர்ம மரணம்: சிசிடிவி கேமரா அமைத்து வனத்துறை கண்காணிப்பு
ஈரோடு மாவட்டம் பவானி அருகே, மர்ம விலங்கால் ஆடுகள் பலியாவதை தடுக்க, சிசிடிவி கேமரா பொருத்தி, வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள ஜம்பை பேரூராட்சிக்குட்பட்ட நல்லி பாளையத்தில் கிராம மக்கள் செம்மறி ஆடுகளை அதிக அளவில் தங்களது வீடுகளில் வளர்த்து வருகின்றனர். கிராமத்து பட்டிகளில் வளர்த்து வரும்ஆடுகளை, கடந்த சில தினங்களாக, இரவு நேரத்தில் புகுந்து மர்ம விலங்குகள் வேட்டையாடி வருகின்றன.
இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி வனத்துறையினர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திடம் கிராம மக்கள் வலியுறுத்தினர். எனினும், எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதனால், கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கிராமத்தில் புகுந்து இரவு நேரம் வேட்டையாடும் மர்மவிலங்கை கண்காணிக்கும் வகையில் அந்தியூர் வனத்துறையினர், தானியங்கி கண்காணிப்பு கேமராவை கிராமத்தின் இருவேறு இடங்களில் பொறுத்தி உள்ளனர். அத்துடன், இரவு நேர ரோந்து பணியை மேற்கொள்ளப்பட உள்ளதால், கிராம மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.